Skip to content
//பஷீர் ‘கண்நோய் வந்தவனுக்கு தீபம் போல நீ எனக்கு துன்பம் தருகிறாய்’ என ராமன் சீதையை நோக்கிச் சொல்லும் வரியை சுட்டிக்காட்டி வால்மீகியே ராமனைத்தான் குற்றம்சாட்டுகிறார் என்று விளக்குகிறார். சீதை தீபம்தான் ,நோயிருப்பது ராமனிடம். ராமனை பேரறத்தானாக சித்தரிக்கும் வால்மீகி அவனை எதிர்மறையாகக் காட்டும் இந்தத்தருணத்தை ஏன் எழுதினார்? ராமன் தெய்வமாக ஆனபின்னரும்கூட இதை இத்தனைகாலம் ஏன் இந்தப்பெரும் காவியத்தில் அனைவரும் நீடிக்கவிட்டனர் என வினவுகிறார் அதற்கு விடையாக வால்மீகி ராமாயணம் ஒரு மகத்தான காவியம், அது ஒற்றைப்படையாக வாழ்க்கையைச் சொல்லவில்லை, மானுட மனத்தின் விளக்கமுடியாத ரகசியங்களையே அது தேடிச்செல்கிறது என்கிறார் பஷீர். ஆண் அரசியலில் புறவாழ்க்கையில் பேரறத்தான் என்றாலும் அகவாழ்க்கையில் அவன் உள்ளப்போக்குகளே வேறு என கொள்ளலாம் என்கிறார். தன் மனைவியை பிறன் விழிதொட்டு நோக்கினாலே அவனால் தாளமுடியவில்லை. அவனுடன் இருந்தாள் என்பதே எரியச்செய்கிறது என விளக்குகிறார். …. ‘பஷீர் இதேபோல நபியை விமர்சனநோக்கில் பார்ப்பாரா? இந்துக்கள் இஸ்லாமை இப்படி நோக்க இஸ்லாம் அனுமதிக்குமா?” என் பதில் இதுவே. ‘இஸ்லாம் அனுமதிக்காது. பஷீரால் அதைச் செய்யமுடியாது. ஆனால் இந்துமதம் அனுமதிக்கும். பஷீர் உட்பட எவரும் விமர்சனம் செய்யலாம். அதுவே இந்துமதத்தின் தனித்தன்மை, அதன் ஆன்மீக ஆற்றல். அவ்வியல்பு அழிந்தால் இந்துமதம் என ஒன்று இருப்பதற்கே பொருளில்லை. இந்துமதம் கீழான நிலையில் நிற்கிறது அதை இஸ்லாம் கிறித்தவம் போல மேம்படுத்தவேண்டும் என நான் எண்ணவில்லை. எனக்கு இந்து மரபின் பன்மைத்துவத்தில், அடிப்படையான விவாதத்தன்மையில், தத்துவச்செழுமையில் நம்பிக்கை இருக்கிறது. ஆகவே இந்துமதம் நின்றிருக்கும் இடத்துக்கு அனைத்து மதங்களும் வரவேண்டும் என்றே நினைக்கிறேன்.’//