Skip to content
//அறிதல் என்பது வேறு. தெரிந்துகொள்ளுதல் என்பது எப்போதுமே ஒரு துண்டு அறிவைத்தான். அறிதல் என்பது ஒரு முழு அறிவை. எல்லா அறிதலும் நம்மை அறிவதுதான் … தெரிந்துகொள்ளும்போது சலிப்பும் சோர்வும் உண்டு. நம் கல்விக்கூட வகுப்புகள் பெரும்பாலும் அப்படித்தான். ஆனால் அறிந்துகொள்ளுதல் ஒருபோதும் சோர்வோ சலிப்போ அளிப்பதில்லை. சொல்லப்போனால் மனித வாழ்க்கையிலேயே உச்சகட்ட இன்பம் என்றால் அறிதலின் இன்பம்தான். ஆகவேதான் உண்மையான குரு சீடனுக்கு அளிக்கும் ஆனந்தத்தை வேறெந்த மனிதரும் அளிப்பதில்லை என நம் மரபு சொல்கிறது. … தெரிந்துகொள்ளுதல் நம் நினைவை நிரப்புகிறது. அறிதல் அப்படி அல்ல. அது நம் ஆளுமையை மாற்றியமைக்கிறது. ஒன்றைத் தெரிந்துகொண்டதுமே நாம் மாறிவிடுகிறோம். அதற்கு முன்பிருந்த நாம் அல்ல அதற்குப்பின். அதற்குமுன் இருந்த உலகம் அல்ல அதற்குப்பின். … நாம் அறிதல்களை நோக்கி நம்மைத் திறந்து வைப்பதே இல்லை. நாம் நம்மைச்சுற்றி ஒரு வேலி கட்டியிருக்கிறோம். அது நம்மை ஆபத்துகளில் இருந்து காக்கிறது என்று நினைக்கிறோம். உண்மையில் அது நம்மை அறிதல்களில் இருந்து தடுக்கிறது. நாம் நிச்சயமின்மையை அஞ்சி அறிதல்களே இல்லாத வழக்கமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம். … நாம் அறிந்து அதுவாக வேண்டிய மாயக்கணங்கள் கொண்ட நூல்களும் பல இங்குள்ளன. நீங்கள் யார் என்பதே அந்த நூல் எது என்பதைத் தீர்மானிக்கிறது. அதை நோக்கிச் செல்லுங்கள். வேட்டைநாய் இறைச்சியைக் கண்டுகொள்வது போல, முமுட்சு ஞானத்தைக் கண்டுகொள்கிறான். நீங்களும் கண்டுகொள்வீர்கள் //